Aug 12, 2008

இட்லி சாம்பார்‍ - 2


    ரத்னா கஃப் இட்லி சாம்பார்‍ பற்றி முதல் பதிவில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்.இந்த பதிவில் இட்லி சாம்பாரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

      இட்லியை சாம்பாருடன் சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்பதை ரத்னா கஃபே இலக்கணமாக்கினாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பதை அவரவர் விருப்பதிற்கு விட்டுவிடுவது நுகர்வோரை மதிக்கும் நிர்வாகத்தின் பண்பை பறை சாற்றுகிறது.கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரி ஆற்றைப் போல் தட்டில் நுங்கும் நுரையுடன் வந்து விழும் சாம்பாரை ஆசைத் தீர துழாவிவிட்டு இட்லியின் சரிந்த பகுதியில் ஸ்பூனால் ஒரு வெட்டு வெட்டி ,மேற்படி இட்லித்துண்டைத் தண்ணீர்த் தொட்டியில் தலையை அமுக்கி கொலை செய்யும் வெறியனைப் போல் அல்லாது சாம்பாரில் மெல்ல மெல்ல முக்கி எடுத்து,கிண்ணென்றும் இல்லாமல் சொதசொதவென்றும் இல்லாமல் நடுநிலையில் அத்துண்டினை ஸ்பூனால் ஆசையுடன் வாரி எடுத்து உச்சி மோர்ந்து உண்ணுவது உத்தம முறையாக பரிந்துரைக்கபடுகிறது.

       சாம்பாருடன் தட்டில் இரண்டர கலந்து விட்ட இட்லியை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற மமதையுடன் நோஞ்சான் ஸ்பூனினால் கை தேர்ந்த சமையற்கலைஞர் அடுக்கிய கொத்தவரங்காய் பிஞ்சுகளை "டக்‍டக்‍டக்‍டக்‍டக்‍" என்ற காலப் பரிமாணத்தின் சீரான அளவில் வெட்டுவதுப் போல் வெட்டிவிட்டு இட்லித்துண்டங்கள்‍சாம்பார்க் கலவையை கட்டுமான தொழில் புரியும் கொத்தனார் இரும்பு பான்டில்  சிமென்ட்,மணல்,தண்ணீர் கலவையைக் கொல்லர் உதவியுடன் லாவகமாக கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து மறுபடியும் கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து பின்னர் கலவையைப் பூச உபயோகிப்பது போல ஸ்பூனால் எடுத்து வாய்க்குள் செலுத்துவது ஜனரஞ்ச செயலாகும்.

      சிலர் உபரியாக உளுந்து வடை ஒன்றையும் சேர்த்து துண்டங்கள் அங்கிங்கென்னாதபடி எங்கும் பரவி இட்லியின் துணுக்குகளுடன் இரண்டரக் கலந்து இருக்கும் வகையில்  வெட்டி அமைத்துக் கொள்வது, இக்கலவைக்கு இன்னும் உறுதி  அளித்தால் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு அளித்துக் கொள்ளும் வடையாகும்..அதாவது விடையாகும்.

      வெறும் இட்லி மாத்திரம் சுவையான,நிலையான டிபன் ஆயிடுமா? அதற்கு சாம்பார், வெள்ளைச் சட்டினி, வெங்காயச் சட்டினி, புதினா சட்டினி போன்ற மற்றக் கட்சிகளுடன் கூட்டணித் தேவைப்படுகிறது.தட்டின் மத்தியில் கூட்டு சேர்ந்த சிவப்புக் கார சட்டினி இட்லியை நாட வைக்குமா அல்லது ஆட வைக்குமா? காலம்(கோவி.கண்ணன் அல்ல? தான் பதில் கூற‌ வேண்டும்.

10 கருத்துக்குத்து:

srid said...

இட்லி மீது இப்படி ஒரு பாசமா? உன் எழுத்திலே இது தான் சூப்பர் மச்சி.கலக்கல்:))

கிரி on August 12, 2008 at 2:50 PM said...

//கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரி ஆற்றைப் போல் தட்டில் நுங்கும் நுரையுடன் வந்து விழும் சாம்பாரை ஆசைத் தீர துழாவிவிட்டு//

ஹா ஹா ஹா அப்புறம் அதுக்கும் சண்டைக்கு வந்திட போறாங்க....கபினி சாம்பார்னு :-))))))))))

இப்படி பதிவ போட்டு இட்லி வடை சாம்பாரை நினைவு படுத்தி விட்டீர்களே ...ஊருக்கு வந்தா தான் சாப்பிட (குடிக்க) முடியும் :-)

கார்க்கி on August 12, 2008 at 2:56 PM said...

//இப்படி பதிவ போட்டு இட்லி வடை சாம்பாரை நினைவு படுத்தி விட்டீர்களே ...ஊருக்கு வந்தா தான் சாப்பிட (குடிக்க) முடியும் :-)//

வாங்க கிரி.. நம்ம ஊரு அளவுக்கு இல்லைனாலும் கோமளா'ஸ் ல கிடைக்குமே... நாமலும் சிங்கைல 3 வருஷம் ஆனி புடுங்கி இருக்கோம் நண்பரே!!!

ஸ்ரீசரண் on August 12, 2008 at 3:11 PM said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே

கார்க்கி on August 12, 2008 at 3:12 PM said...

//ஹா ஹா ஹா அப்புறம் அதுக்கும் சண்டைக்கு வந்திட போறாங்க....கபினி சாம்பார்னு :-))))))))))//

சரியா சொன்னிங்க கிரி...

கார்க்கி on August 12, 2008 at 3:14 PM said...

//பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே/

வாங்க நண்பரே!! எது இட்லியா நம்ம பதிவா?????????? :))

Anonymous said...

மொக்கசாமி,தத்துவம் எல்லாம் ஏதோ ரேடியோ ல கேட்ட மாதிரி இருக்கு.ஆனா இது உண்மையிலே நல்லா இருக்கு.

கார்க்கி on August 12, 2008 at 4:32 PM said...

//மொக்கசாமி,தத்துவம் எல்லாம் ஏதோ ரேடியோ ல கேட்ட மாதிரி இருக்கு.ஆனா இது உண்மையிலே நல்லா இருக்கு./

அட அது எல்லாம் என் சொந்த சரக்குனு சொல்லவே இல்லையே.. அது ஒரு தொகுப்புதான்...அனுபவிச்சிட்டு போங்க..ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு? அப்படியே பேர சொன்னா நல்லா இருக்கும்

கிரி on August 12, 2008 at 6:48 PM said...

//நம்ம ஊரு அளவுக்கு இல்லைனாலும் கோமளா'ஸ் ல கிடைக்குமே//

ஏங்க கார்க்கி உங்களுக்கு இப்படி ஒரு கொலை வெறி....அங்கேலாம் சாம்பார் கொடுமையா இருக்கு..மொக்கைனா மொக்கை அப்படி ஒரு மொக்கை..சாம்பார்னு இல்ல எதுவுமே நல்லா இல்ல.

காசையும் கொடுத்து தண்டனைய அனுபவிச்சுட்டு வரணும்....இப்ப புதுசா வந்து இருக்கிற முருகன் இட்லி மற்றும் சரவணபவன் பரவாயில்ல.

கார்க்கி on August 12, 2008 at 6:52 PM said...

//அங்கேலாம் சாம்பார் கொடுமையா இருக்கு..மொக்கைனா மொக்கை அப்படி ஒரு மொக்கை..சாம்பார்னு இல்ல எதுவுமே நல்லா இல்ல.
//

அப்படியா? நான் இருந்தது 2003 2005 அப்போ ஏதோ நல்லா இருந்தா மாதிரி நினைக்கிறேன்..எது எப்படியோ ஒரு தடவை ரத்னா கஃபே வந்து பாருங்க..

 

all rights reserved to www.karkibava.com