Jul 7, 2008

குத்து பாடலும் வைரமுத்துவும்..


சமீப காலமாக அல்ல,எப்போதுமே குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று. இலந்த பழத்தில்(அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) ஆரம்பித்து மொழ மொழ வரைக்கும் நீளும் இந்த பட்டியலில் அனைத்து நடிகர்களின் பாடல்களும் அடங்கும்.நடிகர்கள் மட்டும் அல்ல,இசை அமைப்பாளர்கள்,பாடல் ஆசிரியர்கள் என இதை தொடதவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதில் தவறு இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக வைரமுத்து மற்றும் சிலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்,குத்து பாட்டு ஊறுகாய் போன்றதாம்,அதனால் ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே வைக்க வேண்டுமாம்.நல்ல வேலை கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே அதை வைக்க வேண்டும் சொல்லாமல் விட்டதற்காக நன்றி சொல்லலாம்.பாடல் என்ற ஒன்றே கதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பது என் கருத்து.ஒரு சில விதிவிலக்கல்கள் இருக்கலாம். இளமை காலங்களில் பல குத்து பாடல் எழுதிய இவர்,வயதான பின் இவர் விரும்புவதையே சினிமா உலகம் செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? இன்றும்,சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் எழுதும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காத கவிப்பேரரசு அதை ஒரு நல்ல மெல்லிசை பாடலாக வைக்கும் படி அறிவுரை வழங்கலாமே.அப்படி அவர் அதை தவிர்க்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விடலாமே..
வெள்ளி இரவானால் புப்,டிஸ்கோ என்று தேடும் இன்றைய இளைஞர்கள் அங்கே "பூங்கதவே" என்று ஆடினால் நன்றாக இருக்கும் என்கிறாரா கவிஞர்? யாக்கை திரி என்ற பாடலில் தமிழின் அழகை அத்துனை சிறப்பாக எழுதிய வைரமுத்து , பத்து ஆண்டுக்கு முன் எழுதிய சில பாடல்களை இங்கே குறிப்பிட என்னால் முடியவில்லை. தன் துறையில் சிகரம் தொட்ட பல படைப்பாளிகள் இந்த தவறை செய்கிறார்கள்.அவர்கள் இருந்த காலத்தில் தங்களுக்கு பிடிக்காதவற்றை செய்த இவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கும் போது தனக்கு அடுத்த சந்ததியை பார்த்து இதை செய்யாதே என்று சொல்வது அறிவுரையாக எனக்கு தெரியவில்லை.
இரட்டை அர்த்த வார்த்தைகள் தான் குத்துபாடலகள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்று அவர்கள் சொல்லியதாக எங்கோ படித்த ஞாபகம்.நல்ல மேல்லிசைகளில் வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டுகளை அறியாதவர்கள் இருக்க முடியாது.என்னை பொருத்த வரை யாக்கை திரியும் குத்து பாடல்தான்.ஆனால் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட பாடல் அது.வேட்டையாடு விளய்யடு என்ற படத்தில் வரும் நெருப்பே என்ற பாடலும் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட குத்து பாடல் தான்..அதற்காக பாடல்கள் முழுவதும் தமிழ் மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.ஆனால் அப்படி தான் எழுதுவேன் இல்லை என்றால் வாய்ப்பே வேண்டாம் என்ற பெண் கவிஞர் தாமரை எடுத்த முடிவை கூட எடுக்காத இந்த கவிப்பேரரசு பிற பாடல் ஆசிரியர்களை எந்த பூக்கை எந்த விட வேண்டும்.பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போடும் அதே இளைஞர்கள் தான் தங்கள் ஐ பாட் இல் உங்களது காலத்தால் அழியா பல பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.எந்த ரசிகர்களால் நீங்கள் இந்த புகழை அடைந்தீர்களோ அவர்களது ரசிப்பு தன்மையே சந்தேகிக்கும் உங்களது இந்த கருத்து என்னை மிகவும் கவலை கொள்ள செய்திருக்கிறது. எந்த வகை பாடல் ஆனாலும் அதன் வெற்றி நியாயமானதாகவே இருக்கும் என்று நினைப்பவன் நான் .ஒரு வேலை அது எனக்கு பிடிக்காமல் போனாலும் ,பிறரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து என் விருப்ப பாடலை கேட்பேனே தவிர எனக்கு பிடிக்காத பாடலை பழி சொல்வது தவறு என நினைக்கின்றேன். எந்த ஒரு மாற்றமும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.வெறும் டண்டனக்க என்ற தாளமும் வேகமும் ,ஒரு நடிகையின் கவர்ச்சியும் மட்டுமே ஒரு பாடல் வெற்றிக்கு போதாது என்பதற்கு ஆயிரம் எடுத்து காட்டுக்கள் தரலாம்.சமிபத்திய வெற்றி குத்தான நாக்க முக்க இது வரை யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான இசை அமைப்புக்காக இந்த வெற்றியை பெற்றுள்ளது.

"இசை ஒரு கடல்.நமக்கு வேண்டுயது எல்லாமே அதில் உண்டு.நம் வேலை,தேடி எடுத்து கொள்ள வேண்டியது." வைரமுத்துவின் வைர வரிகளையே அவருக்கு பதிலாக்கி முடிக்கிறேன்.

1 கருத்துக்குத்து:

cheena (சீனா) on December 14, 2008 at 1:17 PM said...

மகேந்திரனுக்கு அடுத்து வைரமுத்துவா ?
ம்ம்ம்ம்ம்ம்ம் .........

//அவர்கள் இருந்த காலத்தில் தங்களுக்கு பிடிக்காதவற்றை செய்த இவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கும் போது தனக்கு அடுத்த சந்ததியை பார்த்து இதை செய்யாதே என்று சொல்வது அறிவுரையாக எனக்கு தெரியவில்லை.//

இந்தக் கோணத்தில் சிந்தித்தால் சரியான பதிவு தான். குத்துப் பாடல்களை மொத்தமாகத் தவிர்க்க இயலாது. இக்கால இளைய தலைமுறை விரும்புகிறது.

//பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போடும் அதே இளைஞர்கள் தான் தங்கள் ஐ பாட் இல் உங்களது காலத்தால் அழியா பல பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.//

உண்மை உண்மை

தங்களின் கோபம் புரிகிறது.

நல்வாழ்த்துகள்

 

all rights reserved to www.karkibava.com